ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்.. ஐபிஎல்-இல் இருந்தும் ஓய்வு.. ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய கிரிக்கெட் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஷிகர் தவான், இந்திய அணிக்காக கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இதுவரை இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், 222 ஐபிஎல் போட்டிகளிலும் ஆடி உள்ளார். நீண்ட காலமாக ஷிகர் தவானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்திய அணியில் சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் தலைமுறை துவக்க வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 38 வயதாகும் ஷிகர் தவான் இனி இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்ற சூழ்நிலை உள்ளது. கடந்த 2024 ஐபிஎல் தொடரில் உடற் தகுதி காரணமாக ஷிகர் தவானால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியவில்லை. இதை அடுத்து தனது வயது மற்றும் தனக்கான வாய்ப்புகள் குறைந்து வருவதை அடுத்து ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.
ஷிகர் தவான் தனது ஓய்வு அறிவிப்பை ஒட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது எனக்கு நல்ல நினைவுகள் மட்டுமே உள்ளன. எனக்கு ஒரே ஒரு கனவு மட்டுமே இருந்தது. இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதுதான் அது. அதை நான் செய்து விட்டேன். எனது பயணத்தில் எனக்கு உதவி செய்த பலருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். முதலில் எனது குடும்பத்தினருக்கு, அதன் பின் எனது பால்ய கால பயிற்சியாளர் தாரக் சின்கா அவர்களுக்கு, எனக்கு இந்த விளையாட்டின் அடிப்படையை சொல்லிக் கொடுத்த மதன் ஷர்மா அவர்களுக்கு நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.
எனது அணிக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர்களுடன் நான் நீண்ட காலம் விளையாடி இருக்கிறேன். எனக்கு மற்றொரு குடும்பமாகவும், எனக்கு பெயரையும் புகழையும், அன்பையும் கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஒரு கதையை முழுமையாக படித்து முடிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு பக்கமாக திருப்ப வேண்டும் என்று சொல்வார்கள். அதை தான் நான் இப்போது செய்யப் போகிறேன். சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து நான் ஓய்வை அறிவிக்கிறேன்.
As I close this chapter of my cricketing journey, I carry with me countless memories and gratitude. Thank you for the love and support! Jai Hind! 🇮🇳 pic.twitter.com/QKxRH55Lgx
— Shikhar Dhawan (@SDhawan25) August 24, 2024
நான் எனது ஓய்வை அறிவிக்கும் இந்த தருணத்தில் மன அமைதியுடன் இருக்கிறேன். ஏனெனில், நான் நாட்டுக்காக நிறைய விளையாடி இருக்கிறேன். எனக்கு வாய்ப்பளித்த பிசிசிஐ மற்றும் டெல்லி கிரிக்கெட் அமைப்புக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். எனக்கு இத்தனை ஆண்டுகளாக அன்பை அளித்த ரசிகர்களுக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன். எனக்கு நானே ஒரு விஷயத்தை மட்டுமே சொல்லிக் கொள்கிறேன். மீண்டும் இந்தியாவுக்காக விளையாட முடியவில்லை என எப்போதும் சோகமாக இருக்காதே.. ஆனால் இந்தியாவுக்காக நீண்ட காலம் ஆடியதற்காக மகிழ்ச்சியுடன் இரு. என்னைப் பொறுத்தவரை இந்தியாவுக்காக ஆடியதே மிகப்பெரிய விஷயம்.” என்று கூறியிருக்கிறார்.