சஷாங்க் சிங் அதிரடி.. குஜராத் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி திரில் வெற்றி
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
17-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஹா மற்றும் கில் ஆகியோர் களமிறங்கினர்.
இவர்களில் சஹா 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, இந்த சீசனில் முதல் முறையாக களமிறங்கிய வில்லியம்சன், 22 ரன்கள் அடித்த நிலையில் அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கில் அரைசதம் அடித்து அசத்தினார். பின்னர் களமிறங்கிய சாய் சுதர்சன் இந்த முறை அதிரடியாக விளையாடினார். அவர் 19 பந்துகளில் 33 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் நிலைத்து விளையாடி அணியை வலுவான இலக்கை நோக்கிகொண்டு சென்றார்.
இறுதி கட்டத்தில் ராகுல் திவேட்டியா அதிரடியாக விளையாடி 8 பந்துகளில் 23 ரன்கள் அடித்தார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கில் 89 ரன்கள் அடித்து அசத்தினார். பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ரபடா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். இதில் தவான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்தார்.
4 பவுண்டரிகளை விளாசிய பேர்ஸ்டோ 22 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரன் சிங் 35 ரன்களில் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த சாம் கரன் 5 ரன்களிலும், சிகந்தர் ராஸா 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சஷாங்க் சிங் நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தார். இறுதி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி பெற 7 ரன்கள் தேவை என்ற நிலையில், குஜராத் அணி பவுலர் தர்ஷன் நல்காண்டே வீசீய பந்தில், அஷுடோஷ் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து ஹர்மன்பிரீத் பிரார் களமிறங்கினார்.
பின்னர் 3 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், தர்ஷன் நல்காண்டே வீசீய பந்தை சஷாங்க் சிங் பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்தில் ஒரு ரன் அடித்ததை தொடர்ந்து, பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் 200 ரன்கள் குவித்து திரில் வெற்றி பெற்றது. சஷாங்க் சிங் 61 ரன்களுடன் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) இறுதிவரை களத்தில் இருந்தார். குஜராத் தரப்பில் நூர் முகமது அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.