சாம்சன் அதிரடி வீண்.. 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அசத்தல் வெற்றி

 
DC vs RR

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

17-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 56-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜேக் ப்ரேசர்-மெக்கர்க் மற்றும் அபிஷேக் பொரேல் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் ப்ரேசர்-மெக்கர்க் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக்கர்க் 19 பந்தில் அரைசதம் அடித்த நிலையில் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் இறங்கிய ஷாய் ஹோப் 1 ரன்னிலும், அக்சர் படேல் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ரிஷப் பண்ட் களம் புகுந்தார்.

DC vs RR

மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பொரேல் 36 பந்தில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ரிஷப் பண்ட் உடன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார். இதில் பண்ட் 15 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து குல்பாடின் நைப் களம் இறங்கினார். இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக பொரேல்  65 ரன், ப்ரேசர் மெக்கர்க் 50 ரன் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், பட்லர் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் சாம்சன் மற்றும் ரியான் பராக் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதிரடியாக விளையாடிய சாம்சன் 86 ரன்களிலும் பராக் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

DC vs RR

பின்னர் தொடர்ந்து விக்கெட்டுகள் விழத்தொடங்கின. முடிவில் ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு  201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய சாம்சன்  86 ரன்களும் ரியான் பராக் 27 ரன்களும் சுபம் துபே 25 ரன்களும் எடுத்தனர். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ், கலீல் அஹமது மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

From around the web