சாம்சன், ஜூரெல் அதிரடி.. லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி

 
RR vs LSG

ல்கனோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

17-வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி , லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். தொடக்கத்தில் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டி காக் 8 ரன்களிலும் , பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

RR vs LSG

தொடர்ந்து கே.எல்.ராகுல் , தீபக் ஹூடா இருவரும் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். பொறுப்புடன் ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அரைசதம் கடந்த பிறகு அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட், போல்ட், அவேஷ் கான், அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பட்லர் 34 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும், அடுத்து வந்த ரியான் பராக் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரெல் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 

RR vs LSG

அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். இறுதியில் ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 71 ரன்னும், துருவ் ஜூரெல் 52 ரன்னும் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தனர். 

From around the web