ரோகித் சர்மா அதிரடி.. பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்தியா!

 
Ind vs Pak

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 

இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் மற்றும் அப்துல்லா ஆகியோர் களம் இறங்கினர். இதில் 20 ரன் எடுத்த நிலையில் அப்துல்லா ஆட்டமிழந்தார்.

Ind vs Pak

இதையடுத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் இமாமுடன் ஜோடி சேர்ந்தார். இதில் இமாம் 36 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து ரிஸ்வான் பாபர் ஆசமுடன் இணைந்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் ஆசம் அரைசதம் அடித்த நிலையில் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களம் இறங்கிய சகீல் 6 ரன், இப்டிகார் அகமது 4 ரன், ஷதாப் கான் 2 ரன், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ரிஸ்வான் 49 ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த தொடர் விக்கெட் வீழ்ச்சி காரணமாக பாகிஸ்தான் அணி தடுமாறியது. இதையடுத்து நவாஸ் மற்றும் ஹசன் அலி ஜோடி சேர்ந்தனர். இதில் நவாஸ் 4 ரன்னிலும், ஹசன் அலி 12 ரன்னிலும் வெளியேறினர். 

இதனால் 187 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், குல்தீப், பாண்ட்யா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.

Ind vs Pak

இந்திய அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித், கில் களம் இறங்கினர். இதில் கில் 16 ரன் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த கோலி 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஸ்ரேய்ஸ் ஐயர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். மறுமுனையில் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 63 பந்தில் 86 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். இதையடுத்து கே.எல்.ராகுல் களம் இறங்கினார். இறுதியில் இந்திய அணி 30.3 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

From around the web