ரோகித் சர்மா அதிரடி அரைசதம்.. அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

 
Ind vs Ire

அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

9-வது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதிலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அயர்லாந்து ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் டெலானி அதிரடியாக விளையாடி அயர்லாந்து கௌரமான நிலையை எட்ட உதவினார்.

Ind vs Ire

வெறும் 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 96 ரன்கள் எடுத்தது. அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சிராஜ், அக்சர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக டெலானி 26 ரன்கள் அடித்தார்.

இதனைத்தொடர்ந்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக ரோகித் சர்மாவுடன், ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார்.

அதிரடியாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் ரோகித் சர்மா, 36 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். இதனிடையே டி 20 தொடரில் தனது 4 ஆயிரம் ரன்களையும் ரோகித் சர்மா கடந்தார். அதன்பிறகு காயம் காரணமாக ரோகித் சர்மா பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து ரிஷப் பண்டுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சூர்யகுமார் யாதவ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

Ind vs Ire

இறுதியில் சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்த ரிஷப் பண்ட் 36 (26) ரன்களும், ஷிவம் துபே (0) ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியின் சார்பில் மார்க் ஆதிர் மற்றும் பெஞ்சமின் வொயிட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் அயர்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, உலகக்கோப்பை தொடரில் முதலாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

From around the web