ரியான் அதிரடி.. மும்பை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
17-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. இதில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
மும்பை அணியின் 3 டாப் வரிசை வீரர்கள் (ரோகித் சர்மா, நமன் திர், டவால்ட் பிரீவிஸ்) கோல்டன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இஷான் கிஷான் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 32 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 34 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் அணி சார்பில் டிரென்ட் பவுல்ட் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் இருவரும் தலா 3 விக்கெட்டுகளும் நந்ரே பர்கர் 2 விக்கெட்டுகளும் அவேஷ் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், பட்லர் 13 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து களமிறங்கிய சாம்சனும் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ரியான் பராக் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். வெறும் 15.3 ஓவர்களிலேயே இலக்கை கடந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றி ராஜஸ்தானுக்கு ஹாட்ரிக் வெற்றியாக பதிவாகி உள்ளது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 54 ரன்கள் அடித்து அணி வெற்றி பெற உதவினார். மும்பை தரப்பில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.