அசுடோஷ் சர்மா போராட்டம் வீண்.. பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை அணி த்ரில் வெற்றி

 
MI vs PK

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

17-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர்.

இதில், இஷான் கிஷன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோகித் சர்மாவுடன், சூர்யகுமார் யாதவ் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த சூர்யகுமார் யாதவ், அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 53 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

MI vs PK

அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர்களான ஹர்திக் 10 ரன்னிலும், டிம் டேவிட் 14 ரன்னிலும், சைபர்ட் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், திலக் வர்மா அதிரடி காட்ட மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளும், சாம் கரண் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் சார்பில் கேப்டன் சாம் கரண் மற்றும் பரப்சிம்ரன் சிங் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பரப்சிம்ரன் சிங் ரன் ஏதும் எடுக்காதநிலையில் வெளியேறினார். அவரைத்தொடர்து ரூசோவ் 1 ரன்னும், சாம் கரண் 6 ரன்னும், லிவிங்ஸ்டோன் 1 ரன்னும், ஹர்பிரித் சிங் பாட்டியா 13 ரன்னும், ஜிதேஷ் சர்மா 9 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷஷாங் சிங் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.

MI vs PK

அடுத்ததாக அசுடோஷ் சர்மாவுடன், ஹர்பிரித் பிரார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ரன்கள் சேர்த்த அசுடோஷ் சர்மா 23 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 28 பந்துகளில் 7 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஹர்பிரித் பிரார் 21 ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ரபாடா கடைசி ஓவரில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்

இறுதியில்  ஹர்ஷல் பட்டேல் 1 ரன்னுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா மற்றும் கோட்சி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஆகாஷ் மேத்வால், கோபால் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது.

From around the web