பாஜக வேட்பாளராக களம் இறங்கும் முகமது ஷமி..? அப்ப இனி கிரிக்கெட் ஆடவே மாட்டாரா.. உண்மை என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி பாஜக சார்பில் மேற்கு வங்கத்தில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2023-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தூணாக இருந்து அதிக விக்கெட்கள் வீழ்த்தி, இந்திய அணி இறுதிப் போட்டி வரை செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் முகமது ஷமி. அதன் பின் அவருக்கு காலில் காயம் மற்றும் வலி இருந்ததால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த அவர், தற்போது லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார்.
அதே சமயம் இன்னும் இரு மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முகமது ஷமியை மேற்கு வங்க தேர்தலில் நிறுத்த பாஜக மேலிடம் முயற்சித்து வருகிறது. ஷமிக்கு கடந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் அம்மாநில ஆளும் பாஜக அரசு விளையாட்டு மைதானம் அமைக்க பிரம்மாண்ட திட்டத்தை அடிக்கல் நாட்டியது.
இது போன்ற சம்பவங்களால் முகமது ஷமி - பாஜக இடையே ஒரு நல்லுறவு இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் அவரை நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வைக்க பாஜக முயன்று வருகிறது. எனினும், முகமது ஷமி 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்று, 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஆர்வமாக இருக்கிறார். அவர் இன்னும் ஓரிரு ஆண்டுகளே கிரிக்கெட் ஆட முடியும். எனவே, இப்போது அவர் உலகக்கோப்பை வாய்ப்பை தவற விட்டால் அவருக்கு எப்போதும் அது கிடைக்காமல் போகலாம்.
அதே சமயம், அரசியல் என்பது முற்றிலும் வேறு களம் என்பதால் அவர் மிகக் கவனமாகவே முடிவு செய்வார் என எதிர்பார்க்கலாம். முன்பு மேற்கு வங்கத்தில் சவுரவ் கங்குலியை பாஜக சார்பில் களமிறக்க ஒரு திட்டம் இருந்ததாகவும், அவர் அதை மறுத்ததாகவும் ஒரு தகவல் உள்ளது. கங்குலி மறுத்த நிலையில் மேற்கு வங்கத்தை பிடிக்க பாஜக முகமது ஷமியை பயன்படுத்த நினைக்கிறது. ஆனால், ஷமி அரசியலில் குதிப்பாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.