வெற்றி ரகசியத்தைப் பகிர்ந்தார் முகமது ஷமி!

 
Shami

தனது வெற்றி ரகசியத்தை குறித்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி பகிர்ந்துள்ளார்.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற லீக் சுற்று முடிவில் டாப் - 4 இடங்களை பிடித்த இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்பட 6 அணிகள் வெளியேறின.

இந்த தொடரில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி இதுவரை 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அதிக விக்கெட் வீழ்த்தியோர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இத்தனைக்கும் இந்திய அணி விளையாடிய முதல் நான்கு போட்டிகளில் ஷமிக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடந்த அரையிறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

Shami

இந்த நிலையில், ஷமி தனது வெற்றி ரகசியத்தை பகிர்ந்துள்ளார். எப்பொழுதுமே அப்போதைய சூழலை ஆராய்வேன். ஆடுகளத்தின் தன்மை, பந்து ‘ஸ்விங்’ ஆகிறதா இல்லையா என்பதைக் கவனத்தில் கொள்வேன். பந்து ஸ்விங் ஆகவில்லையெனில், ஸ்டம்ப்பைப் பார்த்தே பந்துவீசுவேன். பந்தடிப்பாளர்கள் ‘டிரைவ்’ ஆடும்போது, பந்து அவர்களின் மட்டையில் பட்டு ‘கேட்ச்’ ஆகும் வகையில், ஆடுகளத்தின் குறிப்பிட்ட பகுதியை நோக்கிப் பந்தை வீசுவேன் என்று கூறியுள்ளார்.

ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தொடரின் இடையிலேயே காயமடைந்து வெளியேறியதை அடுத்து, ஷமிக்கு அணியில் இடம் கிடைத்தது. அந்த வாய்ப்பை ஷமி கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் 3 முறை ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை ஷமி வீழ்த்தியுள்ளார். அத்துடன், ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் தனதாக்கிக்கொண்டார்.

shami

இந்நிலையில், நாளை (நவ. 19) ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப் போட்டியிலும் ஷமி முக்கியப் பங்காற்றுவார் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

From around the web