மேக்ஸ்வெல் அதிரடி.. ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

 
Aus vs Afg

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 

இந்த தொடரில் இன்று நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மத்துல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் களமிறங்கினர். இதில் குர்பாஸ் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரஹ்மத் ஷா 30 ரன்னும், கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிதி 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அஸ்மதுல்லா ஒமர்சாய் 22 ரன்னிலும், முகமது நபி 12 ரன்னிலும் வெளியேறினர்.

ஒருபக்கத்தில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஜட்ரன் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். இதன் மூலம் உலகக் கோப்பையில் சதம் விளாசிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை இப்ராகிம் ஜட்ரன் பெற்றார். இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் வீரர் சமியுல்லா ஷின்வாரி உலகக் கோப்பையில் 96 ரன்கள் எடுத்திருந்ததே தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

Aus vs Afg

இறுதியில், ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக இப்ராகிம் ஜட்ரன் 129 ரன்களும், ரஷித் கான் 35 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து, 292 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. முதலாவதாக களமிறங்கிய வார்னர், ஹெட் ஜோடியில் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும், அடுத்து களமிறங்கிய மிட்டெல் மார்ஷ் 24 ரன்களும், டேவிட் வார்னர் 18 ரன்களும், ஜோஷ் இங்லிஸ் ரன் ஏதும் எடுக்காமலும், லபுஸ்சேன் 14 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 6 ரன்னும், மிட்செல் ஸ்டார்க் 3 ரன்னும் எடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 

இதனால் ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின்னர் மேக்ஸ்வெல் மற்றும் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். ஒருபுறம் கம்மின்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தநிலையில், மறுபுறம் மேக்ஸ்வெல் ருத்ர தாண்டவம் ஆடினார். விரைவாக அரைசதம் கடந்த அவர் அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தினார். தொடர்ந்து ஆப்கான் அணியின் பந்து வீச்சை சிதறடித்த அவர், தனது சதத்தை பூர்த்தி செய்தார். 

Aus vs Afg

தசைப்பிடிப்பால் அவதியடைந்த மேக்ஸ்வெல் விரைவில் விக்கெட் இழப்பார் என்று எண்ணியிருந்த ஆப்கான் வீரர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வலியால் அவதியடைந்தாலும் பந்துகளை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார். ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் அவரது விக்கெட்டை எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் தனது இரட்டை சதத்தினை பதிவு செய்து அசத்தினார். 

முடிவில் ஆஸ்திரேலியா அணி 46.5 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 293 ரன்கள் எடுத்தது. இறுதியில் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 21 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களுடன் 201 ரன்களும், பேட் கம்மின்ஸ் 12 (68) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ் ஜோடி, 8வது விக்கெட்டுக்கு 170 பந்துகளில் 202 ரன்கள் பார்டினர்ஷிப் குவித்து புதிய சாதனை படைத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் நவீன் உல்-ஹக், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

From around the web