நேரலையில் KL ராகுலை திட்டிய லக்னோ உரிமையாளர்.. ரசிகர்கள் ஆவேசம்!
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் படுமோசமான தோல்வி அடைந்த லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை அதன் உரிமையாளர் காட்டமாக விவாதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
17-வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 57-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி டெஸ்ட் போட்டி போல ஆடி முதல் 6 ஓவர்களில் வெறும் 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பின் ஓரளவு ரன் சேர்த்து 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது.
ஆனால் அடுத்த பேட்டிங் செய்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துவக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா சரமாரியாக பவுண்டரிகளாக அடித்து வெறும் 9.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்ட செய்து 10 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற வைத்தனர்.
இந்த மோசமான தோல்வி லக்னோ அணியின் வீரர்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. குறிப்பாக லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் டெஸ்ட் போட்டி போல பேட்டிங் செய்து 33 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். அவரது மோசமான பேட்டிங்கால் தான் அந்த அணி வெறும் 165 ரன்கள் எடுத்தது.
இந்த நிலையில் போட்டி முடிந்தவுடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கடும் அதிருப்தியில் இருந்தார். அவர் நேராக மைதானத்திற்குள் நுழைந்து கே.எல்.ராகுலை சந்தித்து கடுமையாக பேசினார். அவர் கைகளை ஆட்டி, முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு பேசிய காட்சிகள் மைதானத்தில் இருந்து அனைத்து கேமராக்களிலும் பதிவானது.
Pathetic Behaviour by team owners of #LSG You don't have bloddy rights to do that shit in front of live telecast #KLRAHUL You deserve to be in a beast franchise
— Thanos (@father_of_demon) May 9, 2024
Shame on you Mr Goenka pic.twitter.com/WGDykgAWtq
பொதுவாக ஒரு அணி தோல்வி அடைந்தால் அறைக்குச் சென்ற பின்னரே உரிமையாளரோ அல்லது பயிற்சியாளரோ அது குறித்து அணியின் வீரர்கள் மற்றும் கேப்டன் உடன் விவாதம் செய்வார்கள். ஆனால், இங்கு அணியின் உரிமையாளர் கோயங்கா நேரடியாக ஆடுகளத்துக்கே வந்து, நூற்றுக்கணக்கான கேமராக்கள் இருப்பதையும் பற்றி யோசிக்காமல், கே.எல்.ராகுல் போன்ற ஒரு அனுபவ இந்திய வீரரை கடுமையாக பேசியிருப்பது விமர்சனத்தை கிளப்பியுள்ளது. என்னதான் கே.எல்.ராகுல் மோசமாக ஆடியிருந்தாலும் கூட, அது குறித்து அறையில் தான் அவர்கள் பேசியிருக்க வேண்டும் என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.