மயங்க் யாதவ் அபார பந்துவீச்சு.. பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ அணி அசத்தல் வெற்றி!

 
LSG vs RCB

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

17-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் கே.எல்.ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து படிக்கல் 6 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஸ்டாய்னிஸ் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுபுறம் தொடக்க வீரர் டி காக் நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தார்.

LSG vs RCB

பின்னர் 56 பந்துகளில் 81 ரன்களுக்கு டி காக் ஆட்டமிழந்தார். கடைசியில் நிக்கோலஸ் பூரன் சிக்சர்களை பறக்க விட்டார். அவர் 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு லக்னோ அணி 181 ரன்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட், யாஷ் தயால் , சிராஜ் , டாப் லீ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர். இதில் டு பிளிஸ்சிஸ் 19 ரன்களில் ரன் அவுட் ஆன நிலையில், விராட் கோலி 22 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஜத் படிதார் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

LSG vs RCB

அடுத்து வந்த கிளென் மாக்ஸ்வெல் (0), கேமரோன் கிரீன் 9 ரன்கள், அனுஜ் ராவத் 11ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனிடையே மகிபால் லாம்ரோர் 13 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை பறக்கவிட்டு ஆதிரடி காட்டிய நிலையில், 33 ரன்களில் ஆட்டமிழந்தார். முகமது சிராஜ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளையும், நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகளையும், மணிமாறன் சித்தார்த், யஷ் தாக்கூர் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

From around the web