2023 ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர்.. 4வது முறையாக வென்று புதிய சாதனை படைத்த கிங் கோலி!
2023-ம் ஆண்டின் ஒரு நாள் போட்டிக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை விராட் கோலி 4வது முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
ஐசிசி என்றழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டு தோறும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர், டி20 வீரர், டெஸ்ட் வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி, டி20 அணி மற்றும் டெஸ்ட் அணி ஆகியவற்றைத் தேர்வுசெய்து விருது வழங்கி வருகிறது.
அந்த வகையில், கடந்த 2023-ம் ஆண்டிற்கான சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் விராட் கோலி 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,795 ரன்கள் குவித்துள்ளார். இதில், 12 அரைசதங்களும், 5 சதங்களையும் விளாசியுள்ளார்.
உலகக் கோப்பை போட்டியில் நம்பர் மூன்றாவது வீரராக களம் இறங்கி 11 இன்னிங்ஸில் 9 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார். இதன் மூலம் 765 ரன்கள் உலகக்கோப்பை தொடரில் அவர் அடித்திருந்தார். இதன் மூலம் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
10 ICC Awards, One VIRAT KOHLI! 👑#INDvENG #India #TeamIndia #ICCAwards #ViratKohli pic.twitter.com/qmd3MzGBFN
— CRICKETNMORE (@cricketnmore) January 25, 2024
இந்நிலையில் தான் விராட் கோலிக்கு 2023-ம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒருநாள் கிரிக்கெட் சிறந்த வீரருக்கான விருதை 4வது முறையாக விராட் கோலி பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2012, 2017, 2018 ஆகிய ஆண்டுகளிலும் ஐசிசியின் சிறந்த ஒருநாள் வீரர் விருதை விராட் கோலி வென்றுள்ளார்.