ஜெய் ஷாவுக்கு அடித்த ஜாக்பாட்.. இளம் வயதில் ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐசிசியின் தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக் காலம் வரும் நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை ஐசிசி நிர்வாகம் தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவியில் ஒருவர் 3 முறை வகிக்கலாம். கிரெக் பார்க்லே, தொடர்ந்து 2 முறை ஐசிசி தலைவராக உள்ள நிலையில், 3-வது முறை போட்டியிடப் போவதில்லை என்று கடந்த 20-ம் தேதி அறிவித்தார்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான ஜெய் ஷா, ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். இவரை தவிர்த்து மற்ற யாரும் போட்டியிடாத நிலையில், அவர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
2019 அக்டோபர் முதல் பிசிசிஐ கெளரவ செயலாளராகவும், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, 2024 டிசம்பர் 1 முதல் ஐசிசி தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய் ஷா , ஐசிசி வரலாற்றில் மிக இளம் வயதுள்ள தலைவர் என்ற பெருமையை பெறவுள்ளார். இதற்கு முன்பு, ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன், சஷாங்க் மனோகர் ஆகிய நால்வர் மட்டுமே ஐசிசி தலைமை வகித்த இந்தியர்களாக இருந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து ஜெய்ஷா தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதால், ஐசிசி தலைமை பதவியை அலங்கரிக்கும் 5 ஆவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார்.