ஈட்டி எறிதல் தரவரிசை வெளியீடு... முதலிடத்தை பிடித்த நீரஜ் சோப்ரா..!

உலக ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில், ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். அதுதான், ஒலிம்பிக் தடகளப் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் ஆகும். இதனால், அவர் ‘இந்தியாவின் தங்க மகன்’ என்று மக்களால் கொண்டாடப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பரில், சூரிச்சில் நடந்த டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ‘முதல் இந்தியர்’ என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். அதன் பின்னர், கடந்த 5-ம் தேதி தோஹாவில் நடந்த மதிப்புமிக்க டயமண்ட் லீக் தொடரின் முதல் லெக்கில் 88.67 மீ தூரம் ஈட்டி ஏறிந்து தங்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்நிலையில் உலக தடகள அமைப்பு நேற்று இரவு (மே 22) ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டிக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், நீரஜ் சோப்ரா 1455 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆண்டர்சன் பீட்டர்ஸ் 1433 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார். அதே நேரத்தில் ஜேக்கப் வாட்லேஜ் 1416 புள்ளிகளுடன் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
முன்னதாக, 22 புள்ளிகள் பின்தங்கி இருந்த நீரஜ் சோப்ரா, அதிரடியாக முன்னேறி முதலிடத்தை அடைந்தார். இந்தியாவை சேர்ந்த மற்ற இந்திய வீரர்களான ரோஹித் யாதவ் 15ம் இடத்திலும், டி.பி.மானு 17ம் இடத்திலும் உள்ளனர்.