பும்ராவுக்கு பாகிஸ்தான் வீரர் பரிசு.. ரசிகர்கள் நெகிழ்ச்சி.. வைரல் வீடியோ!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பாகிஸ்தான் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி பரிசு வழங்கிய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவும் தொலைக்காட்சி தொகுப்பாளரான சஞ்சனா கணேசனும் காதலித்து கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த நிலையில், கடந்தாண்டு இறுதியில் சஞ்சனா கணேசன் கர்ப்பமானார். இந்த நிலையில் இவர்களுக்கு செப்டம்பர் 4-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறப்பின் போது மனைவியுடன் இருப்பதற்காக நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இருந்து பும்ரா விலகினார். அதன்பின் குழந்தை பிறந்த நிலையில், அடுத்த 4 நாட்களில் இந்திய அணியுடன் பயிற்சியில் இணைந்தார். இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா களமிறங்கினார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்து விளையாடிய போது, திடீரென கனமழை பெய்தது. மாலை 4.55 மணியளவில் தொடங்கிய மழை, இரவு 8 மணியாகியும் நிற்கவில்லை. இதன்பின் நடுவர்கள் சோதனை செய்து ஆட்டத்தை 9 மணிக்கு தொடங்கலாம் என்று ஆலோசித்த நிலையில் மீண்டும் மழை பெய்தது.
இதனால் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் இன்று தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஓய்வறையில் இருந்த பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி இந்திய அணியின் பும்ராவை சந்தித்தார். அப்போது ஷாகின் அப்ரிடி, புதிதாக தந்தையான பும்ராவுக்கு அன்பு பரிசு ஒன்றை வழங்கினார். இதனால் நெகிழ்ச்சியடைந்த பும்ரா, ஷாகின் அப்ரிடிக்கு நன்றி கூறிச் சென்றார்.
Spreading joy 🙌
— Pakistan Cricket (@TheRealPCB) September 10, 2023
Shaheen Afridi delivers smiles to new dad Jasprit Bumrah 👶🏼🎁#PAKvIND | #AsiaCup2023 pic.twitter.com/Nx04tdegjX
இந்த வீடியோ பாகிஸ்தான் அணியின் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் வீரர்கள் எதிரும் புதிருமாக இருந்து வந்த நிலையில், தற்போது இரு அணி வீரர்களும் சகோதரர்களாக அன்பை பரிமாறிக் கொள்வது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.