ஓய்வு பெற போகிறாரா..? ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தோனி.! வைரல் வீடியோ

 
Dhoni

முழங்கால் வலியுடன் தமிழக ரசிகர்களுக்கு தல தோனி நன்றி தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற 61வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 30% தக்க வைத்துள்ளது. அதனால் டெல்லிக்கு எதிராக நடைபெறும் கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது. 

முன்னதாக 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து சேப்பாக்கத்தில் முதல் முறையாக இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான தமிழக ரசிகர்கள் சென்னை அணிக்கு ஆதரவு கொடுத்தனர். குறிப்பாக எதிரணியின் மைதானங்களிலேயே தோனிக்காக ஆதரவு கொடுத்த ரசிகர்கள் சேப்பாக்கத்தில் அவர் சிக்ஸர் அடித்த போதெல்லாம் மெரினாவுக்கு கேட்கும் அளவுக்கு 100 டெசிபல் சத்தத்தை மிஞ்சி ஆரவாரம் செய்தனர்.

Dhoni

இந்த நிலையில் நேற்றுடன் இந்த சீசனில் சேப்பாக்கத்தில் சென்னை பங்கேற்கும் லீக் சுற்று போட்டிகள் முடிந்தன. அந்த வகையில் தங்களுக்கு இந்த சீசன் முழுவதும் அபாரமான ஆதரவு கொடுத்த தமிழக ரசிகர்களுக்கு நேற்றைய கடைசி லீக் போட்டியின் முடிவில் ஒலிபெருக்கியில் நன்றி தெரிவித்த கேப்டன் எம்எஸ் தோனி தனது கையொப்பமிட்ட பந்துகள், மஞ்சள் நிற பதாகைகள், ஜெர்ஸி, தொப்பிகள் போன்ற உபகரணங்களை பரிசாக மைதானத்தை சுற்றிச் சென்று கொடுத்தார். குறிப்பாக அவர் தூக்கிப்போட்ட பரிசுகளை பிடிப்பதற்கு ரசிகர்கள் ஆரவாரத்துடன் போட்டி போட்டனர்.

ஆனால் விரைவில் 42 வயதை தொடுவதால் ஏற்கனவே முழங்கால் வலியுடன் இத்தொடரில் விளையாடி வரும் தோனி போட்டி முடிந்ததும் வலியை குறைப்பதற்காக ஐஸ் பேக் வைத்துக்கொண்டே சிரித்த முகத்துடன் அந்த பரிசுகளை தமிழக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொடுத்தது அனைவரது நெஞ்சங்களை தொட்டது. அதை விட இந்த போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்ட இந்திய நட்சத்திர ஜாம்பவான் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அனைவருக்கும் பரிசு கொடுக்கும் தோனியிடம் ரசிகனை போல ஓடி சென்று தன்னுடைய நெஞ்சின் மீது இருக்கும் சட்டையில் ஆட்டோகிராப் போடுமாறு கேட்டுக் கொண்டார்.


அதை சற்றும் எதிர்பாராத தோனி “நீங்க போய் என்கிட்ட ஆட்டோகிராப் கேட்கலாமா” என்ற வகையில் பணிவுடன் கட்டிப் பிடித்து உடனடியாக கவாஸ்கர் கேட்ட இடத்தில் ஆட்டோகிராப் போட்டு நன்றியும் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட்டின் மகத்தான ஜாம்பவானாக போற்றப்படும் கவாஸ்கர் ஒரு சாதாரண ரசிகனாக மாறி தோனியிடம் அப்படி ஆட்டோகிராப் வாங்கியது ஒட்டுமொத்த முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

அத்துடன் சிவம் துபே, மொய்ன் அலி, துஷார் தேஷ்பாண்டே, ருதுராஜ் உள்ளிட்ட சென்னை அணியினரும் தமிழில் எழுதிய பதாகைகளுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கையொப்பமிட்ட பந்துகள் போன்ற பரிசுகளை அன்புடன் கொடுத்தனர்.

From around the web