RCB வெற்றிக்கு தோனி காரணமா..? ஓய்வறையில் உண்மை உடைத்த தினேஷ் கார்த்திக்

 
MSD

தோனி அடித்த சிக்ஸ் 110 மீ தூரம் சென்று விழுந்ததே பெங்களூரு அணி வெற்றிக்கு உதவியது என்று தினேஷ் கார்த்திக் ஓய்வறையில் பேசியுள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி செல்கிறது.  பிளே-ஆப் சுற்றில் இடம் பெறும் 4 அணிக்கான தரவரிசையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 3 அணிகள் முன்பே தகுதி பெற்று இடம் பிடித்து விட்டன. இதனால், மீதமுள்ள 4-வது இடம் யாருக்கு என நிர்ணயிக்கும் 68-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது.  

இந்த போட்டியில், நடப்பு சாம்பியனான சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய சென்னை அணி கடைசி ஓவரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்திலேயே தோனி சிக்சர் ஒன்றை விளாசினார். அந்த சிக்ஸ் சின்னசாமி மைதானத்திற்கு வெளியில் சென்று விழுந்தது. இதனை கணக்கிடும் போது, 110 மீ தூரம் சென்றது தெரிய வந்தது.

Dinesh Karthik

இதனால் பெங்களூரு அணி புதிய பந்தில் பவுலிங் செய்ய வேண்டிய நிலை உருவாகியது. பழைய பந்தில் கூடுதலாக ஈரம் இருந்ததால், பவுலர்களால் திட்டமிட்ட பகுதிகளில் பவுலிங் செய்ய முடியாமல் திணறினர். ஆனால் புதிய பந்து வழங்கப்பட்டதால், அந்த பந்தில் சரியாக க்ரிப் செய்ய முடிந்ததோடு, திட்டமிட்ட பகுதிகளிலும் பவுலிங் செய்ய முடிந்தது.

இந்த வெற்றி குறித்து பெங்களூரு அணியின் ஓய்வறையில் தினேஷ் கார்த்திக் பேசுகையில், முதல் 8 போட்டிகளில் 7ல் தோல்வியடைந்த போது, 9வது போட்டியில் களமிறங்கியதற்கு முன்பாகவே, இதுதான் என் கடைசி போட்டி என்று முடிவெடுத்தேன். விராட் கோலி, சக வீரர்களிடம் குட் பை சொல்ல தொடங்கிவிட்டேன். ஆனால் காலம் வேறு மாதிரி அமைந்துள்ளது.

அடுத்தடுத்து சில வெற்றிகளை பெற்ற போது, இன்னும் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்ததாக நினைத்தேன். ஆனால் 6 போட்டியில் அனைத்திலும் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சாதாரண பயணம் கிடையாது. தோல்வியின் போது உடனிருந்த ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்துள்ளோம் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த பயணம் இன்னும் முடியவில்லை.


பெங்களூரு ரசிகர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னரும், “அந்த பெங்களூரு அணி எப்படி தெரியுமா” என்று கதையாக சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். இந்த சீசனில் மிகச்சிறந்த ஃபீல்டிங் அணி என்றால் அது பெங்களூரு தான். அதற்கு டூ பிளசிஸின் கேட்ச் ஒன்று தான் ஒரு சோறு பதம்.

அதேபோல் தோனியின் கேட்சை பிடித்த ஸ்வப்னில் சிங்கின் கேட்சும் சாதாரணமானது கிடையாது. என்னை பொறுத்தவரை ஆட்டம் மாறியது தோனி அடித்த 110 மீட்டர் தூர சிக்ஸால் தான். ஏனென்றால் மைதானத்திற்கு வெளியில் சிக்ஸ் சென்றதால், யாஷ் தயாள் வீசுவதற்கு புதிய பந்து கிடைத்தது. அந்த பழைய பந்து ஈரமாக இருந்ததால், திட்டமிட்ட பகுதியில் பவுலிங் செய்ய முடியவில்லை.

ஆனால் முதல் பந்திற்கு பின் யாஷ் தயாள் அசத்திவிட்டார். பயிற்சியாளர் ஆண்டி பிளவரை போல் அல்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டாடுங்கள்.. அப்படியொரு வெற்றியையும், கம்பேக்கையும் பெங்களூரு அணி செய்துள்ளது. ஆனால் அகமதாபாத் மைதானத்தில் நமக்கு ஒரு பணி காத்திருக்கிறது. அதனை வென்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

From around the web