ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. வெண்கலத்தை வென்ற மனு பாக்கர்!
மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பாரீஸ் ஒலிம்பிக் கோலாகலமாக தொடங்கியது. இதையடுத்து நேற்று முதல் போட்டிகள் தொடங்கின. இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கின் 2வது நாளான இன்று மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் மனு பாக்கர் (22) பங்கேற்றார்.
இதில் முதல் 5 ஷாட்களுக்கு பின்னர் மனு பாக்கர் 2வது இடத்திற்கு முன்னேறினார். இதனைத் தொடர்ந்து 10 ஷாட்களுக்கு பின் மனு பாக்கர் 3வது இடத்தில் இருந்தார். 10 ஷாட்களுக்கு பின் ஒவ்வொரு வீராங்கனைகளாக எலிமினேட் ஆக தொடங்கினர்.
15 ஷாட்களுக்கு பின்னரும் மனு பாக்கர் 150.7 புள்ளிகளுடன் 3வது இடத்தில் தொடர்ந்து வந்தார். தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஜியாங் வெளியேறினார். கடைசி 5 வீராங்கனைகள் மட்டுமே போட்டியில் இருந்த நிலையில், சீனாவின் லி சூ வெளியேறினார். இதன்பின் கடைசி 4 வீராங்கனைகளுக்கான போட்டியாக உருவாகியது.
இதன்பின் சீனாவின் தூ வின் வெளியேறிய நிலையில், இந்தியாவின் மனு பாக்கருக்கு பதக்கம் உறுதியானது. இதன்பின் 21வது ஷாட்டில் மனு பாக்கர் 10.1 புள்ளிகள் பெற்று 2வது இடத்திற்கு முன்னேறினார். தொடர்ந்து 22வது ஷாட்டில் மனு பாக்கர் 10.3 புள்ளிகள் பெற்ற நிலையில், கொரிய வீராங்கனை கிம் 10.5 புள்ளிகள் பெற்று மீண்டும் 2வது இடத்திற்கு சென்றார். இதன் காரணமாக இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினார். தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை கொரியா வீராங்கனைககள் வென்றனர்.