இந்திய வீரர் சர்பராஸ் கானுக்கு ஆண் குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்!

இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் சர்ஃபராஸ் கான் - ரொமானா ஜஹூர் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக இளம் வீரர் சர்ஃபராஸ் கான் அறிமுகம் செய்யப்பட்டார். பிப்ரவரி 15-ம் தேதி இந்திய அணிக்கு அறிமுகமான பின், இந்திய அணியின் டெஸ்ட் கேப்பினை தனது தந்தையின் கைகளில் கொடுத்தார் சர்ஃபராஸ் கான். அப்போது அவரது தந்தை நெளஷத் கான் ஆனந்த கண்ணீர் சிந்திய சம்பவம் இந்திய ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்பின் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் சர்ஃபராஸ் கான், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி தனது முதல் சதத்தினை பதிவு செய்தார். இந்திய அணி 356 ரன்கள் பின் தங்கிய போதும், கொஞ்சம் கூட அச்சம் கொள்ளாமல் அதிரடியாக ஆடிய சர்ஃபராஸ் கான் 150 ரன்களை விளாசி மிரட்டினார். இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்தது.
இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இளம் வீரர் சர்ஃபராஸ் கான் தனது குடும்பத்தினரை சந்திக்க வீடு திரும்பினார். இதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் சர்ஃபராஸ் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை பகிர்ந்துள்ளார். தனது மகனை தூக்கி வைத்துள்ள புகைப்படத்தை சர்ஃபராஸ் கான் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். சர்ஃபராஸ் கானுக்கு 2023-ம் ஆண்டு தனது காதலியான ரொமனா ஜஹுர் உடன் ஜம்மு - காஷ்மீரில் திருமணம் நடைபெற்றது.
டெல்லியில் இளங்கலை படித்து வந்த ரொமனா ஜஹுர் உடன் சர்ஃபராஸ் கானின் உறவினர் ஒருவரும் படித்து வந்துள்ளார். ஒருமுறை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சர்ஃபராஸ் கான் டெல்லி சென்ற போது, அந்த உறவினர் மூலம் ரொமனா ஜஹூர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதமடித்த மகிழ்ச்சியில் இருந்த சர்ஃபராஸ் கானுக்கு, தற்போது குழந்தை பிறப்பால் கூடுதல் உற்சாகத்துடன் இருக்கிறார். இன்று சர்ஃபராஸ் கான் தனது 27வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், முதல் நாள் இரவே அவரின் மனைவி குழந்தை மூலமாக மறக்க முடியாத பிறந்தநாள் பரிசைன் அளித்திருப்பதாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.