உலகக்கோப்பை கிரிக்கெட் 2023: நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

 
SA vs NZ

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 

இந்த தொடரில் இன்று நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக பவுமா மற்றும் டி காக் களம் இறங்கினர். இதில் பவுமா 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

SA vs NZ

இதனையடுத்து ஜோடி சேர்ந்த டி காக் மற்றும் வான் டெர் டுசென் இணை ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அபாரமாக ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இவர்களில் முதலில் சதம் அடித்த டி காக் 114 ரன்களில் ஆட்டமிழந்தார். இது இந்த உலகக்கோப்பை தொடரில் அவரது 4-வது சதமாகும். இவர்கள் இருவரும் 2-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 200 ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய வான் டெர் டுசென்  118 பந்துகளில் 133 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

இறுதி கட்டத்தில் டேவிட் மில்லர் அதிரடியில் மிரட்ட தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 357 ரன்கள் குவித்தது. மில்லர் 30 பந்துகளில் 53 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.  நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிம் சவுதி 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதையடுத்து 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திர வீரர்களான கான்வே மற்றும் ரச்சின் ரவிந்திரா விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். 

SA vs NZ

தொடக்கம் முதலே தடுமாறிய நியூசிலாந்து அணி வெறும் 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 190 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. மேலும் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர். 

நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலிப்ஸ் 60 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்களில் வில் யங் மற்றும் டேரில் மிட்செல் தவிர வேற யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை.  தென் ஆப்பிரிக்க வீரர் வான் டெர் டுசென்  ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

From around the web