உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்!
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுள்ளது.
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் பெரேரா ஆகியோர் களம் இறங்கினர். இதில் பெரேரா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து நிசாங்காவுடன் குசல் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. அதிரடியாக ஆடிய நிசாங்கா 51 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதையடுத்து மெண்டிஸ் உடன் சமரவிக்ரமா ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மெண்டிஸ் 77 பந்தில் 122 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய அசலங்கா 1 ரன், டி சில்வா 25 ரன், தசுன் ஷனகா 12 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய சமரவிக்ரமா சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது. குசல் மெண்டிஸ் 122 ரன்னும், சதீரா சமரவிக்ரமா 108 ரன்னும் குவித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 345 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாட தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபிக் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினர். இதில் இமாம்-உல்-ஹக் 12 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து முகமது ரிஸ்வானுடன் அப்துல்லா ஷபிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியின் ரன்வேகம் கணிசமாக உயர்ந்தது. சதம் விளாசிய அப்துல்லா ஷபிக், 113 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடி காட்டிய முகமது ரிஸ்வான் 131 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இறுதியாக பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.