உலகக்கோப்பை கிரிக்கெட் 2023: தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த நெதர்லாந்து!

 
Ned vs SA

தென் ஆப்பிரிக்கா அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நெதர்லாந்து அணி உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 

இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதின. இமாசல பிரதேசம் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியின்போது மழை கடுமையாக குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய விக்ரம்ஜித் சிங் 2 ரன், மேக்ஸ் ஓடவுட் 18 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய அக்கெர்மென் 12 ரன், பாஸ் டீ லீட் 2 ரன், ஏங்கல்பிரெக்ட் 19 ரன், நிதாமனுரு 20 ரன், வான் பீக் 10 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினர்.

Ned vs SA

இதையடுத்து ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் வான் டர் மெர்வ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.  இதில் வான் டர் மெர்வ் 29 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் எட்வர்ஸ் 78 ரன்கள் எடுத்தார். 

இதனை தொடர்ந்து 246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடியது. தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பவுமா 16 ரன், டிகாக் 20 ரன், அடுத்து களம் இறங்கிய வென் டர் டெசன் 4 ரன், மார்க்ரம் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து 44 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா தடுமாறியது.

Ned vs SA

இதையடுத்து மில்லர் மற்றும் க்ளாசென் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 89 ஆக உயர்ந்த போது இந்த இணை பிரிந்தது. நிதானமாக ஆடிய க்ளாசென் 28 ரன்னில் வெளியேறினார். சிறிது நேரத்தில் மில்லரும் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், தென் ஆப்பிரிக்காவின் கடைசி நம்பிக்கையும் முடிவுக்கு வந்தது. 

இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 42.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. நெதர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக வான் பீக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் நெதர்லாந்து அணி, பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

From around the web