உலகக்கோப்பை கிரிக்கெட் 2023: இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா!

 
SL vs Aus

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 

இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பதும் நிசாங்க மற்றும் குசல் பெரேரா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அவர்கள் இருவரும் முறையே 61 ரன்கள் மற்றும் 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

SL vs Aus

அடுத்து வந்தவர்களில் அசலங்கா மட்டும் 25 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினர். 157 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இருந்த இலங்கை அணி அடுத்து 52 ரன்கள் சேர்த்திருந்தபோது மீதம் இருந்த 8 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 43.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். அந்த அணியின் டேவிட் வார்னர் 11 ரன்களில் வெளியேற அடுத்து வந்த ஸ்டீபன் ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இதனால் 24 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.

SL vs Aus

இதன் பின்னர் இணைந்த மிட்செல் மார்ஷ் மற்றும் லபுஸ்சேன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தது. மார்ஷ் 52 ரன்களில் ஆட்டமிழக்க லபுஸ்சேன் 40 ரன்கள் எடுத்தார். ஜோஸ் இங்கிலீஷ் 58 ரன்களும், மேக்ஸ்வெல் 31 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 20 ரன்களும் சேர்க்க 35.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி வெற்றி இலக்கை எட்டியது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

From around the web