உலகக்கோப்பை கிரிக்கெட் 2023: நெதர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி!

 
Ned vs Afg

நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 

இந்த தொடரில் இன்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக வெஸ்லி பாரேசி மற்றும் மேக்ஸ் ஓ டவுட் களம் இறங்கினர். இதில் வெஸ்லி பாரேசி 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

Ned vs Afg

இதையடுத்து மேக்ஸ் ஓ டவுட் உடன் காலின் அக்கெர்மென் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் மேக்ஸ் ஓ டவுட் 42 ரன்னிலும், அக்கெர்மென் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் இறங்கிய ஏங்கல்பிரெக்ட் ஒரு புறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் களம் இறங்கிய ஸ்காட் எட்வர்ட்ஸ் 0 ரன், பாஸ் டீ லீட் 3 ரன், சாகிப் சுல்பிகர் 3 ரன், லோகன் வான் பீக் 2 ரன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நிலைத்து நின்று ஆடிய ஏங்கல்பிரெக்ட் அரைசதம் அடித்து அசத்தினார்.

அரைசதம் அடித்து அசத்திய ஏங்கல்பிரெக்ட் 58 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முகமது நபி 3 விக்கெட்களையும், நூர் அகமது 2 விக்கெட்களையும், ரஹ்மான் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Ned vs Afg

இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜட்ரான் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 10 ரன், இப்ராகிம் 20 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து ரஹ்மத் ஷா மற்றும் ஹஸ்மத்துலா ஷாகிதி ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

இதில் ரஹ்மத் ஷா அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து ஹஸ்மத்துல்லா ஷாகிதியுடன் ஓமர்சாய் ஜோடி சேர்ந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ஹஸ்மத்துல்லா ஷாகிதி 56 ரன், ரஹ்மத் ஷா 52 ரன் அடித்தனர். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 4வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

From around the web