உலகக்கோப்பை கிரிக்கெட் 2023: நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்!

 
Afg vs Eng

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 

இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு அபாரமான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். 

Afg vs Eng

அணியின் ஸ்கோர் 114 ஆக உயர்ந்த போது இப்ராகிம் ஜட்ரான் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் இறங்கிய ரஹ்மத் ஷா 3 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிடி களம் இறங்கினார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் 57 பந்தில் 80 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து ஹஸ்மத்துல்லா ஷாகிடி 14 ரன், அடுத்து களம் இறங்கிய ஓமர்சாய் 19 ரன், நபி 9 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து ரஷீத் கான் மற்றும் இக்ராம் அலிகில் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஷீத் கான் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து முஜீப் களம் இறங்கினார். அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய இக்ராம் 58 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது.

Afg vs Eng

இதையடுத்து 285 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோ 2 ரன், மலான் 32 ரன், அடுத்து களம் இறங்கிய ரூட் 11 ரன், பட்லர் 9 ரன், லிவிங்ஸ்டன் 10 ரன், சாம் கரன் 10 ரன், வோக்ஸ் 9 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புரூக் 66 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி 169 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதையடுத்து அடில் ரஷீத், மார்க் வுட் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 215 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து 69 ரன் வித்தியாசத்தில் நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

From around the web