என்னைப்பற்றி கூறிய கருத்து ஏன் வைரலானது என தெரியவில்லை: சாய்னா நேவால்

 
Siddharth-Saina

சித்தார்த் என்னைப்பற்றி கூறிய கருத்து ஏன் வைரலானது என தெரியவில்லை என்று பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சொந்த நாட்டு பிரதமரின் பாதுகாப்பே சமரசாமாக்கப்பட்டுள்ளபோது எந்த ஒருநாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூற முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலை நான் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறேன்’ என்றார்.  

சானியே நேவாலின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த், ‘உலகின் நுட்பமான சேவல் சாம்பியன். கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியா பாதுகாப்பாகத்தான் உள்ளது. வெட்கப்படுகிறோம்’ என்றார்.

நடிகர் சித்தார்த்தின் இந்த பதிவு ஆபாசமாக இருப்பதாக கூறி பல்வேறு தரப்பிலும் கண்டனக்குரல்கள் எழுந்தன. பெண் என்றும் பாராமல் சாய்னா நேவாலை நடிகர் சித்தார்த் தரக்குறைவாக விமர்சித்ததாக பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்தது. இதனை தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவு தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார்.  

இந்நிலையில், சித்தார்த் என்னைப்பற்றி கூறிய கருத்து ஏன் வைரலானது என தெரியவில்லை என்று பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சாய்னா நேவால் கூறுகையில், ‘அவர் (சித்தார்த்) முதலில் என்னைப்பற்றி சில கருத்து தெரிவித்துள்ளார். அதன்பின்னர் மன்னிப்புகோரியுள்ளார். அது இவ்வளவு வைரலானது ஏன்? என எனக்கு தெரியவில்லை. ட்விட்டரில் நான் டிரெண்டிங் ஆனது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. சித்தார்த் மன்னிப்புகோரியது மகிழ்ச்சியளிக்கிறது.

பெண்களை நீங்கள் இவ்வாறு குறிவைக்கக்கூடாது. பரவாயில்லை. நான் இது பற்றி கவலைகொள்ளவில்லை. நான் இப்போது இருக்கும் நிலை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை கடவுள் ஆசீர்வதிப்பார்’என்றார்.

From around the web