கடைசி பந்து வரை போராடிய ராஜஸ்தான்.. 1 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் த்ரில் வெற்றி

 
SRH vs RR

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.

17-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.

இதில் அபிஷேக் சர்மா இந்த முறை ஏமாற்றம் அளித்தார். அவர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கை கோர்த்த நிதிஷ் ரெட்டி - டிராவிஸ் ஹெட் இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில், டிராவிஸ் ஹெட் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

SRH vs RR

அரைசதம் அடித்த பிறகும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் குவித்தார். கடைசி கட்டத்தில் கிளாசென் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 42 ரன்களை குவித்தார். இதன் மூலம் ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரை அபாரமாக வீசிய புவனேஸ்வர் குமார், அதிரடி ஆட்டாக்காரர்களான ஜாஸ் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சனை அவுட்டாக்கினார்.

இதையடுத்து ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் பணியின் ஈடுபட்டனர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி ரன்ரேட் உயராமல் பார்த்துக்கொண்டனர். அத்துடன், இருவரும் அரைசதம் அடித்து அடித்தனர். இந்த ஜோடி 135 ரன்கள் திரட்டிய நிலையில் பிரிந்தது.

SRH vs RR

ஜெய்ஸ்வால் 67 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து சிறிது நேரத்தில் ரியான் பராக் 77 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து ஹெட்மயர் 13 ரன்னிலும், துருவ் ஜுரேல் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆட்டம் பரபரப்பானது. கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றில் 13 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் அணியால் 11 ரன்களே எடுக்க முடிந்தது.

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

From around the web