தேஷ்பாண்டே பந்துவீச்சில் சுருண்ட ஐதராபாத்.. 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
17-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரகானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.
தொடக்கத்தில் ரகானே 8 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து டேரில் மிட்செல் களமிறங்கினார். ருதுராஜ் கெய்க்வாட், மிட்செல் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். பின்னர் மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து ஷிவம் துபே களமிறங்கினார்.
அரைசதம் கடந்த பிறகு ருதுராஜ் கெயிக்வாட், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். மறுபுறம் துபே சிக்சர்களை பறக்க விட்டார். சிறப்பாக ஆடிய ருதுராஜ் 54 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 213 ரன்கள் இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடியது.
தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். அதிரடி தொடக்கத்தை கொடுத்த ஹெட் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அன்மோல்பிரீத் சிங் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். தொடர்ந்து அபிஷேக் சர்மா 15 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து எய்டன் மார்க்ரம் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் நிதிஷ் ரெட்டி 15 ரன்னிலும், மார்க்ரம் 32 ரன்னிலும், இதையடுத்து களம் இறங்கிய கிளாசென் 20 ரன்னிலும், அப்துல் சமத் 19 ரன்னிலும், ஷபாஸ் அகமது 7 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 78 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 32 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகள் எடுத்தார்.