ஷசாங் சிங் அதிரடி வீண்.. பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் திரில் வெற்றி
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது.
17-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரராக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினார்.
அவர்களில் டிராவிஸ் ஹெட் 21 ரன்களும், அபிஷேக் சர்மா 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் வந்த நிதிஷ் ரெட்டி, அதிரடி காட்டினார். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த நிலையில், 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்துல் சமத் 25 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் பேர்ஸ்டோ ரன் எதுவும் எடுக்காமலும், பிரப்சிம்ரன் சிங் 4 ரன்களும், தவான் 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் சாம் கரன், ஷிகந்தர் ராசா ஆகியோர் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். அணியின் ஸ்கோரை 58 ரன்னாக இருந்தபோது சாம் கரன் 29 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஷிகந்தர் ராசா 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஷசாங் சிங் , அஷுதோஷ் சர்மா இருவரும் அதிரடி காட்டினர். கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பஞ்சாப் அணியால் 26 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது. ஷசாங் சிங் 25 பந்துகளில் 46 ரன்களும், அஷுதோஷ் சர்மா 12 பந்துகளில் 28 ரன்களும் எடுத்தனர். இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது.