ஹெட், அபிஷேக் அதிரடி அரைசதம்.. லக்னோ அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி

 
SRH vs LSG

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

17-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 57-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் டி காக் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் டி காக் 2 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய ஸ்டோய்னிஸ் 3 ரன்னிலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் லக்னோ அணி 10 ஓவர்களில் 57 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து க்ருணால் பாண்ட்யா மற்றும் நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தனர். இதில் பாண்ட்யா 24 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஆயுஷ் பதோனி களம் இறங்கினார்.

SRH vs LSG

பூரன் - பதோனி இணை நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இதில் பதோனி 28 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக பதோனி 55 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் லக்னோ பந்து வீச்சை எந்த வித சிரமமின்றி எதிர்கொண்டு அதிரடியில் வெளுத்து வாங்கினர்.

SRH vs LSG

அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் அரைசதம் அடித்தார். சிறிது நேரத்திலேயே அபிஷேக் சர்மா 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரின் விக்கெட்டையும் வீழ்த்த லக்னோ அணி எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

முடிவில் வெறும் 9.4 ஓவர்களிலேயே 167 ரன்கள் அடித்து ஐதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 75 ரன்களும் அடித்தார்.

From around the web