ஹர்பிரீத் பிரார் அபாரம்... டெல்லி அணி பரிதாப தோல்வி!!

 
PK

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஐபிஎல் தொடரின் 59வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் தவான் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 4 ரன்கள், ஜிதேஷ் ஷர்மா 5 ரன்கள், சாம் கரன் 20 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் பிரப்சிம்ரன் சிங் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 

PK

தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 61 பந்துகளில் சதம் அடித்தார். பின்னர் பிரப்சிம்ரன் 103 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் பிலிப் சால்ட் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் 54 ரன்களில் வெளியேறினார். 

DC

அடுத்து களமிறங்கிய ஹக்கிம் கான் 16 ரன்கள் மற்றும் பிரவின் டூபேவும் 16 ரன்கள் ஒரளவு ரன் சேர்த்தநிலையில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்களும் ரன் சேர்க்க தவறினர். முடிவில் டெல்லி அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக சிறப்பாக பந்துவீசிய ஹர்பீரித் பிரார் 4 விக்கெட்டுகளும், நாதன் எல்லீஸ் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.

From around the web