சதம் அடித்த கோலி... பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

 
RCB

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஐபிஎல் தொடரின் 65வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி களமிறங்கினர். அபிஷேக் ஷர்மா 11 ரன்கள், ராகுல் திரிபாதி 15 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென், மார்க்ரம் இருவரும் இனைந்து சிறப்பாக ஆடினர். குறிப்பாக ஹென்ரிச் கிளாசென் அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதம் அடித்தார்.

SRH

மறுபுறம் மார்க்ரம் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹார்ரி புரூக் கிளாசெனுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். தொடர்ந்து அதிரடி காட்டிய கிளாசென் 49 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இறுதியில் 20 ஓவர்களுக்கு ஐதராபாத் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 2 விக்கெட்கள், சிராஜ், அகமது, படேல் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

தொடர்நது 187 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, டு பிளிசிஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய விராட் கோலி 63 பந்துகளில் சதம் விளாசினார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கோலி சதம் அடித்துள்ளார்.

RCB

100 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி ஆட்டமிழந்தார். மறுமுனையில் டுபிளிசிஸ் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசி 47 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் மூன்று இடங்களில் முறையே குஜராத், சென்னை மற்றும் லக்னோ அணிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web