கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறை.. பிரம்மாண்ட சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்!

 
David warner

கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் செய்து இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. சமீபத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருந்த டேவிட் வார்னர் இந்த டி20 போட்டியில் பங்கேற்றார். இது அவரது 100வது சர்வதேச டி20 போட்டி ஆகும்.

David warner

தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 22 பந்துகளில் எல்லாம் அரைசதம் கடந்தார். பின்னர் 36 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார். இதன் மூலம் தன் நூறாவது டெஸ்ட், நூறாவது ஒருநாள் போட்டி மற்றும் நூறாவது டி20 என மூன்று வித கிரிக்கெட் போட்டிகளின் நூறாவது போட்டிகளிலும் 50 ரன்களுக்கும் மேல் குவித்த ஒரே வீரர் என்ற அரிய சாதனையை செய்தார் டேவிட் வார்னர்.

அவர் தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 275 பந்துகளில் 200 ரன்கள் குவித்து இருந்தார். தனது நூறாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 119 பந்துகளில் 124 ரன்கள் குவித்து இருந்தார். தற்போது நூறாவது டி20 போட்டியில் 36 பந்துகளில் 70 ரன்கள் குவித்து இருக்கிறார்.

David warner

உலகிலேயே மூன்று வீரர்கள் மட்டுமே இதுவரை மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் நூறு போட்டிகளில் ஆடி இருக்கிறார்கள். முதலில் இந்த மைல்கல் சாதனையை செய்தது நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர். அடுத்தது இந்தியாவின் விராட் கோலி. அவர்களைத் தொடர்ந்து மூன்றாவதாக இந்த சாதனையை செய்து இருக்கிறார் டேவிட் வார்னர். இது மட்டுமின்றி ஆஸ்திரேலிய வீரர்களில் நூறு டி20 போட்டிகளில் பங்கேற்ற மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் பெற்று இருக்கிறார். முன்னதாக ஆரோன் பின்ச் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் நூறு டி20 போட்டிகளில் ஆடி இருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

From around the web