டு பிளெசிஸ் அதிரடி.. குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு மாஸ் வெற்றி

 
RCB vs GT

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

17-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக விருத்திமான் சஹா மற்றும் சுப்பம் கில் ஆகியோர் களமிறங்கினர்.

குஜராத் அணி ஆரம்பம் முதலே பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அதில் விருத்திமான் சஹா 1 ரன்னிலும், சுப்மன் கில் 2 ரன்களிலும், சாய் சுதர்சன் 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் கை கோர்த்த ஷாருக்கான் - மில்லர் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருவரும் இணைந்து 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மில்லர் 30 ரன்களிலும், ஷாருக்கான் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய திவேட்டியா அதிரடியாக விளையாடினார். இதனிடையே ரஷித் கான் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய திவேட்டியா 21 பந்துகளில் 35 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

RCB vs GT

குஜராத் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாருக்கான் 37 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக சிராஜ், யாஷ் தயாள், வைஷாக் விஜயகுமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் டு பிளெசிஸ், அதிரடியில் மிரட்டினார். 18 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார். விராட் கோலி நிதானமாக விளையாடினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தது.

RCB vs GT

டு பிளெசிஸ் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வில் ஜேக்ஸ் (1), படிதார் (2), மேக்ஸ்வெல் (4), கிரீன் (1) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறிது நேரத்தில் கோலியும் (42) வெளியேற 117 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

எனினும் கார்த்திக் மற்றும் ஸ்வப்னில் சிங் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் பெங்களூரு அணி 13.4 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார  வெற்றிபெற்றது. அத்துடன் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. குஜராத் தரப்பில் ஜோசுவா லிட்டில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

News Hub