தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. பெங்களூரு அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி திரில் வெற்றி

 
SRH vs RCB

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

17-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, ஐதராபாத் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். அபிஷேக் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹெண்ட்ரிச் கிளாசனுடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் பெங்களூரு பந்து வீச்சை சிதறடித்தார். 

அந்த ஜோடியில் ஹெட் 39 பந்துகளில் சதம் விளாசினார். ஹெட் 41 பந்துகளில் 9 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் உள்பட 102 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் ஹெண்ட்ரிச் கிளாசனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 31 பந்துகளில் 2 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் உள்பட 67 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

SRH vs RCB

அடுத்து களமிறங்கிய மார்க்ரம், அப்துல் சமத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி கட்டத்தில் இருவரும் பெங்களூரு பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இறுதியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர்கள் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது. மார்க்ரம் 17 பந்துகளில் 32 ரன்களுடனும், சமத் 10 பந்துகளில் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

287 ரன்கள் குவித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிர ரன்கள் குவித்த அணி தங்கள் முந்தையை சாதனையை ஐதராபாத் மீண்டும் தகர்த்துள்ளது. இதையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பெங்களூரு களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டு பிளெசிசும், விராட் கோலியும் களமிறங்கினர். இருவரும் முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டினர். இருவரும் பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்கவிட்டனர்.

SRH vs RCB

பெங்களூரு அணி 6.2 ஓவர்களில் 80 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. விராட் கோலி 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். ரஜத் படிதார் 9 ரன்னும், சவுரவ் சவுகான் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடந்து அதிரடி காட்டி வந்த டு பிளெசிஸ், 28 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் தொடர்ந்து அதிரடி காட்டி, பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச்சென்ற தினேஷ் கார்த்திக் தன்னால் முடிந்தவரை போராடி அணியை இமாலய இலக்குக்கு அருகில் கொண்டு சென்றார். அவர் 35 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்சருடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றது. ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

From around the web