கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக்!
பெங்களூரு அணி தோல்வி அடைந்த நிலையில் தினேஷ் கார்த்திக் கண்ணீர்மல்க ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி செல்கிறது. தற்போது நடைபெற்று வரும் பிளே-ஆப் சுற்றில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் 17வது முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல முடியாமல் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்ற ஆர்சிபி அணி, 7வது போட்டியில் தோல்வியை சந்தித்து வெளியேறியுள்ளது.
இதனால் ஆர்சிபி அணியின் தினேஷ் கார்த்திக் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து மைதானத்தில் இருந்து ஓய்வறைக்கு சென்றார். இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறுவது குறித்து சூசகமாக கூறியிருந்தார். ஆனால் இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் 13 இன்னிங்ஸ்களில் விளையாடி 326 ரன்களை குவித்தார்.
இதனால் தினேஷ் கார்த்திக் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி தோல்வியடைந்த பின், ஆர்சிபி வீரர்கள் அனைவரும் இணைந்து தினேஷ் கார்த்திக்கை முன் நடக்கவிட்டு மரியாதை கொடுத்தனர்.
விராட் கோலி, டூ பிளசிஸ், சிராஜ் அனைவரும் தினேஷ் கார்த்திக்கை கட்டிபிடித்து வாழ்த்து கூறியதோடு, கைகளை தட்டி உற்சாகம் செய்தனர். அதேபோல் ஆர்சிபி ரசிகர்களும் தினேஷ் கார்த்திக்கிற்கு எழுந்து நின்று மரியாதை அளிக்க, விக்கெட் கீப்பர் கிளவுசை உயர்த்தி காட்டி நன்றி தெரிவித்தார். இதன்பின் சிஎஸ்கே ரசிகர்களும் தினேஷ் கார்த்திக்கிற்கு வாழ்த்து கூறி வந்தனர்.
Rajasthan Royals giving tribute to Dinesh Karthik.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 23, 2024
- A legendary career for DK. 💥pic.twitter.com/6F7LZJ0GpJ
ஆரம்பத்தில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.7.40 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டு 4 ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடி வந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக ரூ.5.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு 3 சீசன்களாக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.