கடினமான காலத்தில் ஒரே உண்மையான உறுதுணை தோனி... மனம் திறந்த விராட் கோலி!!

 
Virat-dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது ஆர்சிபி அணிக்கு மனம் திறந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

2008-ம் ஆண்டு ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்ற விராட் கோலி, சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்ப காலங்களில் தடுமாறிய அவரை நீக்குமாறு விமர்சனங்கள் இருந்தாலும் தொடர்ந்து வாய்ப்பளித்த அப்போதைய கேப்டன் தோனி 2013-ம் ஆண்டு முதல் தமது அணியில் துணை கேப்டனாகவும் செயல்படும் வாய்ப்பை கொடுத்தார். 

அந்த வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி நாளடைவில் சச்சினுக்கு பின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்த விராட் கோலியின் கேப்டன்ஷிப் பண்புகளை உணர்ந்த தோனி 2014-ல் டெஸ்ட் கேப்டன்ஷிப் பொறுப்பை ஒப்படைத்து ஓய்வு பெற்றார். மேலும் 2017-ல் யாருமே எதிர்பாராத வகையில் ஒருநாள் கேப்டன்ஷிப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்து அவரது தலைமை சாதாரண கிரிக்கெட் வீரராக விளையாடிய தோனி 2019 உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார்.

அந்த வகையில் தன்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக திகழும் தோனியை எப்போதுமே விராட் கோலி பாராட்டுவதற்கு தவறுவதில்லை. குறிப்பாக 2019-க்கு பின் சதம் அடிக்கவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்குமாறு பெரும்பாலான முன்னாள் வீரர்கள் விமர்சித்த போது தோனி மட்டும் தான் தமக்கு மெசேஜ் செய்து ஆதரவு கொடுத்ததாக ஏற்கனவே விராட் கோலி தெரிவித்திருந்தார்.

Anushka Virat

இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு அளித்துள்ள பேட்டியில் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை சரிவில் இருக்கும் போது எல்லாம் எனக்கு உறுதுணையாக என்னுடைய மனைவி அனுஷ்கா இருந்ததாக கூறியுள்ளார்.

அனுஷ்கா தான் என்னுடைய பலத்திற்கு முக்கிய காரணமாகும். நான் கடந்து வந்த பாதையை அவரும் கடந்திருக்கிறார். என்னை மிக நெருக்கமாக பார்க்கும் நபர் அனுஷ்கா மட்டும்தான். நான் எந்த விஷயத்திற்கு எப்படி ரியாக்ட் செய்வேன் என்பதை அனுஷ்கா மட்டும்தான் பார்த்திருக்கிறார். இதேபோன்று என்னுடைய குழந்தை பருவ பயிற்சியாளர்,குடும்பத்தினர் பார்த்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர நான் மனதளவில் நொந்து இருந்த நிலையில் என்னை தொடர்பு கொண்டு பேசியவர் தோனி மட்டும் தான்.

தோனியை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது கண்டிப்பாக நடக்காது. நீங்கள் ஏதேனும் ஒரு நாளில் தோனிக்கு தொலைபேசியில் போன் செய்தீர்கள் என்றால், அவர் போனை எடுக்கவே மாட்டார். ஏனென்றால் அவர் போனை பார்ப்பதே இல்லை. அப்படி இருக்கும் நபர் என்னை இரண்டு முறை தொடர்பு கொண்டார். என்னிடம் தோனி பேசியபோது நாம் மனதளவில் பலமான வீரராக இருக்கலாம். நம்மை அனைவரும் அப்படித்தான் நினைப்பார்கள்.

இதனால் பலர் நாம் எப்படி இருக்கிறோம் என்று கேட்கவே மறந்து விடுவார்கள் என்று தோனி என்னிடம் கூறினார். தோனியின் இந்த வார்த்தை எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் எப்போதுமே நம்பிக்கையுடன் உத்வேகத்துடன் மனப்பலத்துடன் இருப்பேன். எவ்வளவு பிரச்சனை என்றாலும் தாங்கி அதற்கான வழியை கண்டுபிடித்து சிக்கலிலிருந்து வெளியேறுவேன். ஆனால் தோனி சொன்ன அந்த தருணத்தில் தான் எனக்கு புரிந்தது. வாழ்க்கையில் ஏதேனும் ஒரு புள்ளியில் நாம் அனைத்திலிருந்தும் சிறிது காலம் வெளியேறி நம்மை சுற்றி என்ன நடக்கிறது.

Virat

நாம் அதற்கு எப்படி தயாராக வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள சில காலம் தேவைப்படும் என்பதை உணர்ந்தேன். மனதளவில் பலமான வீரர் என்று பெயர் வாங்கிவிட்டு இவ்வளவு காலம் விளையாடி எனக்குள் நடக்கும் மன கஷ்டத்தை போய் வெளியே சொல்லி மற்றவர்களுக்கு புரிய வைக்க எனக்கு எந்த இடமும் இல்லை. அதனால்தான் நான் எப்படி உணர்வேன் என்பதை தோனி தெரிந்து கொண்டு என்னிடம் பேசினார். ஏனென்றால் அவரே பல முறை இந்தக் கட்டத்தில் இருந்திருப்பார்.

நான் என்னென்ன அனுபவித்தேனோ அதனை எல்லாம் தோனியும் சந்தித்து இருப்பார். தோனியின் அனுபவத்தின் மூலம் தான், நான் எப்படி உணர்ந்து இருப்பேன். எனக்கு என்ன உதவி வேண்டும் என்று தெரிந்து என்னை அவர் தொடர்பு கொண்டார். தோனி கேப்டனாக இருந்த காலத்தில் அவருக்கு நான் உற்றத் துணையாக இருந்தேன். சொல்லப்போனால் அவரின் வலது கரமாக நான் இருப்பேன். தோனி தான் என்னை அடுத்த கேப்டனாக முடிவு செய்தாரே தவிர நான் கேப்டன் பதவிக்கு ஆசைப்படவில்லை என்று விராட் கோலி கூறியுள்ளார்.

From around the web