அம்பானி குடும்ப திருமணத்தில் ஆட்டம் போட்ட தோனி, பிராவோ.. வைரல் வீடியோ!
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் பிராவோ ஆடிய தாண்டியா ஆட்டம் வீடியோ வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியின் பயிற்சி முகாமில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2-ம் தேதி பங்கேற்று வந்தார் கேப்டன் எம்எஸ் தோனி. சக வீரர்களுடன் இணைந்து ஐபிஎல் தொடருக்கு தயாராகுவதோடு, பயிற்சி முகாமிலேயே ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் திட்டங்களை ஆலோசிப்பார். அதேபோல் இளம் வீரர்களை புரிந்து கொள்ளும் காலமாக இந்த மாதம் அமையும்.
ஆனால் முதல்முறையாக சென்னை பயிற்சி முகாமில் தோனி தாமதமாக பங்கேற்கிறார். இதற்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது தான் காரணமாக அமைந்துள்ளது. ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் இருவருக்கும் ஜூலை 12-ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது.
அதற்கு முன்பாக குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 3 நாட்கள் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. மார்க் ஜுக்கர்பர்க், சுந்தர் பிச்சை, ரிஹானா உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ள நிகழ்ச்சியில், ஐபிஎல் நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.
குறிப்பாக ராமர் கோயில் திறப்பு விழாவில் கூட பங்கேற்காத தோனி, ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சியில் மனைவி சாக்ஷியுடன் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அருகருகே சச்சின் டெண்டுல்கர், தோனி, ரோகித் சர்மா ஆகியோர் அமர்ந்திருந்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதேபோல் மும்பை அணியை சேர்ந்த சக வீரர்களும் கலந்து கொண்டனர்.
Video of the Day is here, Our Mahi - Sakshi and DJ Bravo Playing Dandiya !! 🥳😍#MSDhoni #WhistlePodu #Dhoni @msdhoni
— TEAM MS DHONI #Dhoni (@imDhoni_fc) March 3, 2024
🎥 via @instantbolly pic.twitter.com/TQvTiATbKE
இந்த நிகழ்ச்சியில் தோனி தனது நீண்ட கால நண்பரான பிராவோவுடன் தாண்டியா ஆட்டத்தை உற்சாகமாக ஆடியுள்ளார். அவருக்கு அருகே மனைவி சாக்ஷி மற்றும் பிராவோவின் மனைவியும் தாண்டியா ஆட்டம் ஆடினார்கள். ஐசிசி கோப்பைகளை வென்ற போது பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபடாத தோனி, அம்பானி குடும்ப நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.