டெல்லிக்கு ஆட்டம் காட்டிய தோனி.. சென்னை அணி போராடி தோல்வி

 
DC vs CSK

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

17-வது ஐபிஎல் சீசன் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் இன்று விசாகப்பட்டினத்தில் இரவு நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். இருவரும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த நிலையில் அரைசதம் அடித்த டேவிட் வார்னர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பிரித்வி ஷா 43 ரன்களில் வெளியேறினார்.

DC vs CSK

பின்னர் மிட்சேல் மார்ஷ், ஸ்டப்ஸ் இருவரும் பதிரனா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் ரிஷப் பண்ட் நிலைத்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து பந்துகளை, பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்ட ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் சிறப்பாக பந்துவீசிய பதிரனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான கெய்க்வாட் 1 மற்றும் ரச்சின் 2 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ரஹானே - டேரில் மிட்செல் இணை அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்களில் ரஹானே 45 ரன்களிலும், மிட்செல் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

DC vs CSK

அடுத்து களமிறங்கிய வீரர்களில் துபே 18 ரன்களிலும், சமீர் ரிஸ்வி டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். இறுதி கட்டத்தில் தோனி அதிரடியாக விளையாடி ரசிகர்களை மகிழ்வித்தார். முடிவில் சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய தோனி 16 பந்துகளில் 37 ரன்களுடனும், ஜடேஜா 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். டெல்லி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

From around the web