குஜராத் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி

 
DC vs GT

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

17-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் கில் 8 ரன்னிலும் சஹா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சாய் சுதர்சன் 12 ரன்னிலும், டேவிட் மில்லர் 2 ரன்னிலும், அபினவ் மனோகர் 8 ரன்னிலும், ஷாருக் கான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்த ஏமாற்றம் அளித்தனர். குஜராத் அணி 8.4 ஓவரில் 48 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

DC vs GT

ராகுல் திவேதியா 10 ரன்னிலும், மோகித் சர்மா 2 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். சற்று நிலைத்து நின்று ஆடிய ரஷித் கான் அதிகபட்சமாக 23 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் 17.3 ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களில் சுருண்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு அணி அடித்த குறைந்தபட்ச ரன்கள் இதுவாகும்.

சிறப்பாக பந்து வீசிய டெல்லி அணியின் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், ஸ்டப்ஸ் 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

DC vs GT

90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் பிரித்வி ஷா 7 ரன்களிலும், ஜேக் பிரேசர் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் பொரெல் 15 ரன்களிலும், ஷாய் ஹோப் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.   

இறுதியாக, 8.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு டெல்லி அணி 92 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. குஜராத் அணி சார்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான் மற்றும் ஜான்சன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

From around the web