டெஸ்ட் போட்டிகளில் இருந்து நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் ஓய்வு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
David Warner

ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் வீரர் டேவிட் வார்னர் கண்ணீருடன் பேட்டி கொடுத்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 14 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து 130 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதன்பின் கடைசி முறையாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னருக்கு பாகிஸ்தான் வீரர்கள் தரப்பில் மீண்டும் கார்ட் ஆஃப் ஹானர் மரியாதை அளிக்கப்பட்டது. இதன்பின் டேவிட் வார்னர் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி அரைசதம் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணியின் 119 ரன்களை எட்டிய நிலையில், வார்னர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Warner

இதன்பின் உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்ட டேவிட் வார்னர், சிட்னி மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஹெல்மெட்டை கழற்றி கைகளை உயர்த்தி பெவிலியன் நோக்கி நடந்து சென்றார். அதன்பின் பெவிலியன் அருகில் இருந்த சிறுவன் ஒருவனுக்கு தனது ஹெல்மெட், கிளவுஸ் உள்ளிட்டவற்றை கழற்றி பரிசாக அளித்தது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதனை வாங்கிய அந்த சிறுவன் உற்சாகத்தை வெளிப்படுத்த பெற்றோரை நோக்கி ஓடிய வீடியோ காண்போரை மகிழ்ச்சிபடுத்தியது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி வென்ற நிலையில், ஆஸ்திரேலிய அணி வீரர்களை வழிநடத்தி டேவிட் வார்னர் அழைத்து வந்து பாகிஸ்தான் வீரர்களுடன் கைகளை குலுக்கினார். அதன்பின் நேராக தனது மகள்களை பார்த்த டேவிட் வார்னர், அவர்களை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


அதன்பின் கடைசி போட்டியை முன்னிட்டு டேவிட் வார்னர் பேட்டி கொடுத்த போது, திடீரென பேச முடியாமல் கண்ணீர் சிந்திய காட்சிகள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் சிட்னி மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அனைவரும் மைதானத்தில் களமிறங்கி அவரை பாராட்டினர். 1990களில் ரசிகர்கள் மைதானத்திற்குள் ஓடி வரும் சூழல் இருந்தது. அதன்பின் தற்போது சிட்னி மைதானத்தில் ரசிகர்கள் நின்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 இதுவரை 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் வார்னர், 3 இரட்டை சதம், 26 சதம் மற்றும் 36 அரைசதங்களுடன் 8,729 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளை  பொறுத்தவரையில், 169 போட்டிகளில்  22 சதங்கள், 33 அரை சதங்களுடன் 6,932 ரன்களை குவித்தவர்.   டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2,894 ரன்களும், ஐபிஎல் கிரிக்கெட்டில் 6,397 ரன்களும் குவித்துள்ளார்.

From around the web