கிரிக்கெட் டூ அரசியல்.. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் யூசுஃப்பதான்.. எந்த கட்சியில் தெரியுமா?

 
Yusuf Pathan

நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஹராம்பூர் தொகுதி வேட்பாளராக இந்திய முன்னாள் வீரர் யூசுஃப் பதான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் ஓய்வுக்கு பின் அரசியல் கட்சிகளில் இணைந்து வருவது அதிகரித்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த கவுதம் கம்பீர், அடுத்த ஆண்டிலேயே பாஜகவில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். டெல்லி கிழக்கு தொகுதி எம்பியாக இருந்த அவர், அண்மையில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதேபோல் முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் ஆம் ஆத்மி கட்சி எம்பியாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் 2007-ம் ஆண்டு டி20 உலககோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்காக விளையாடிய யூசுஃப் பதான், நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஹராம்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Yusuf Pathan

ஐபிஎல் தொடரில் யூசுஃப் பதான், கொல்கத்தா அணிக்காக 7 ஆண்டுகள் விளையாடி, 2 முறை கோப்பையை வென்று கொடுத்தவர். ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வீரரான இவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருக்கிறார். கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்ற இருமுறையும் மமதா பானர்ஜி, கொல்கத்தா அணி வீரர்களை நேரடியாக சந்தித்து வாழ்த்து கூறினார். அப்போது முதலே மமதா பானர்ஜியுடனான நட்பு தொடங்கியது.

அதுமட்டுமல்லாமல் கொல்கத்தா அணிக்காக விளையாடியுள்ள இரு வீரர்கள் ஏற்கனவே மமதா பானர்ஜி அமைச்சரவையில் இருந்துள்ளனர். கடந்த ஆட்சியின் போது கொல்கத்தா அணியின் முன்னாள் வீரர் லக்‌ஷ்மி ரதன் சுக்லா விளையாட்டு துறை அமைச்சராக இருந்தார். அதேபோல் மேற்கு வங்க ரஞ்சி அணியின் முன்னாள் கேப்டனும், கொல்கத்தா அணிக்காக விளையாடிய வீரருமான மனோஜ் திவாரி இப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் விளையாட்டு துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

Yusuf Pathan

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள 3வது நட்சத்திர கிரிக்கெட் வீரராக யூசுஃப் பதான் இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை பெற்றாலும், ஜிம்பாப்வே டி10 லீக் தொடர் உள்ளிட்டவற்றில் யூசுஃப் பதான் விளையாடி வந்தார். இந்த நிலையில் திடீரென அரசியலில் கால் பதித்துள்ளது ஆச்சரியம் அளித்துள்ளது. இதனால் இவரது சகோதரர் இர்ஃபான் பதானும் விரைவில் அரசியலில் களமிறங்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

From around the web