2028-ல் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

 
Olympics

2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.

கிரேக்க நகரமான ஒலிம்பியாவில் கி.மு.776-ம் ஆண்டு முதல் கி.மு.393-ம் ஆண்டு வரை, ஜீயஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன. ரோம் நாட்டை சேர்ந்த தியோடோஷியஸ் ஆட்சிக்கு வந்ததும், இந்த போட்டி தடை செய்யப்பட்டது. இந்தப் போட்டியானது, 1894-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி நவீன வடிவம் பெற்று, ஒலிம்பிக் போட்டியாக மாறியது.

Olympics

தற்போதைய ஒலிம்பிக்  விளையாட்டு போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. ஒலிம்பிக்கில் தனி விளையாட்டு மற்றும் குழு விளையாட்டு என 400-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இடம்பெறுகின்றன. இந்த நிகழ்வு கோடைக்கால ஒலிம்பிக் மற்றும் குளிர்கால ஒலிம்பிக் என பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. உலகின் மிகப்பெரிய விளைாட்டு திருவிழாவாக பார்க்கப்படும் ஒலிம்பிக் மிகப் பிரம்மாண்டாக நடைபெறுகிறது.

அடுத்த ஒலிம்பிக் (2024ம் ஆண்டு ஜூலை 26) பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

cricket

இந்த நிலையில் மும்பையில் இன்று (அக்.13) சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் 5 போட்டிகளை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, அந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட், பேஸ்பால், ப்ளாக் கால்பந்து, ஸ்குவாஷ், லாக்ரோஸ் (சிக்சஸ்) ஆகிய 5 விளையாட்டுகளை சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிய விளையாட்டை போன்று 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் தொடரும் நடக்க உள்ளது. 

கடைசியாக 1900ம் ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. அதன்பிறகு 123 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

From around the web