கான்வே, ருதுராஜ் அதிரடி.. டெல்லியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை!!

 
CSK

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஐபிஎல் தொடரின் 67வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கெய்ஜ்வாட் மற்றும் கான்வே டெல்லி அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிரடியில் மிரட்டிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட் 50 பந்தில் 79 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

CSK

இதையடுத்து ஷிவம் துபே களம் இறங்கினார். மறுபுறம் டெவான் கான்வே அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சிக்சர் மழை பொழிந்த ஷிவம் துபே, 9 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதையடுத்து தோனி களம் இறங்கினார். அதிரடியாக ஆடிய கான்வேவும் 87 ரன்னில் வெளியேறினார்.

இதையடுத்து களமிறங்கிய ஜடேஜா 7 பந்தில் 20 ரன்கள் எடுத்தார். இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பில் கலீல் அகமது, சேதன் சகாரியா, அன்ரிச் நார்ட்ஜே தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பிருத்வி ஷா களமிறங்கனர். அந்த ஜோடியில் பிருத்வி ஷா 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிலிப் சால்ட் 3 ரன், ரீலி ரோசவ் 0 ரன், யஷ் துல் 13 ரன், அக்சர் படேல் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

DC

ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய டேவிட் வார்னர் அரைசதம் அடித்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று ஆடி வந்த வார்னர் 86 ரன்னில் வெளியேறினார். இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களே எடுத்தது. இதையடுத்து சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி 2வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

From around the web