ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சென்னை மாஸ் வெற்றி
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
17-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 61-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர்.
சிறப்பாக விளையாடி தொடக்க விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்த நிலையில், ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் பட்லர் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த சாம்சன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபுறம் ரியான் பராக் பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தார். ரியான் பராக், துருவ் ஜுரேல் இருவரும் இணைந்து பந்துகளை , பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர்.
பராக் 47 ரன்களும், ஜுரேல் 28 ரன்களும் எடுத்தனர். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்கள், துஷார் தேஸ்பண்டே 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். தொடர்ந்து 142 ரன்கள் இலக்குடன் சென்னை அணி விளையாடியது.
தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் ரச்சின் ரவீந்திரா அதிரடி காட்டினார். அவர் 18 பந்துகளில் 27 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் வந்த டேரில் மிட்சேல் சிறப்பாக ஆடினார். ருதுராஜ் , மிட்சேல் இருவரும் நிலைத்து ஆடினர். மிட்சேல் 13 பந்துகளில் 22 ரன்களுக்கு வெளியேறினார்.
தொடர்ந்து வந்த ஷிவம் துபே 18 ரன்கள் எடுத்தார். மறுபுறம் பொறுப்புடன் ஆடி ருதுராஜ் கெயிக்வாட் 42 ரன்கள் குவித்தார். இறுதியில் 18.2 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது.