குஜராத் அணிக்கு துரோகம்.. சொந்த மண்ணிலேயே ஹர்திக் பாண்டியாவை எதிர்க்கும் ரசிகர்கள்!

 
Hardik Pandya

மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்கிய நிலையில், அகமதாபாத் மைதானத்தில் குவிந்த ரசிகர்கள் ஒன்றாக இணைந்து எதிர்ப்புக் குரல் எழுப்பியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இந்த தொடருக்கான 5வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கியது. கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, இந்த சீசனில் மும்பை அணியின் கேப்டனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் புதிய கேப்டனாக குஜராத் அணிக்கு சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Hardik Pandya

ஆனால் இந்த மாற்றத்தை மும்பை மற்றும் குஜராத் அணியின் ரசிகர்கள் ஏற்கவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது. ஐந்து முறை கோப்பையை மும்பை அணிக்கு வென்று கொடுத்த ரோகித் சர்மாவை அந்த அணி நிர்வாகம் அவமானப்படுத்தியதாக ஒரு பக்கம் ரசிகர்கள் கொந்தளித்தனர். இன்னொரு பக்கம் சொந்த மாநில அணிக்காக விளையாடாமல் ஹர்திக் பாண்டியா துரோகம் செய்ததாக குஜராத் அணி ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் முதல்முறையாக மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். டாஸின் போது ஹர்திக் பாண்டியாவின் பெயரை அறிவித்த போது, அகமதாபாத் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அத்தனை பேரும் ஒன்றாக இணைந்து ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக குரல் கொடுத்தனர். இது மும்பை அணி வீரர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Hardik Pandya

இந்திய வீரர் ஒருவர் சொந்த மண்ணில் இவ்வளவு எதிர்ப்பை இதுவரை சந்தித்ததே இல்லை. அதுமட்டுமல்லாமல் பும்ரா இருக்கும் மும்பை அணியில், முதல் ஓவரை வீச ஹர்திக் பாண்டியா பந்தை கையில் எடுத்தார். அப்போது ரோகித் சர்மாவை கேமராமேன் க்ளோஸ் அப்பில் காட்டினார். அப்போது ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் எழுப்பினார்கள். அந்த ஓவரில் ஹர்திக் பாண்டியா முதல் பந்திலேயே பவுண்டரி கொடுக்க, ரசிகர்களின் கிண்டல் எல்லை மீறியது. 

இதனால் ரோகித் சர்மாவின் இடத்தை ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால், கோப்பையை வென்று கொடுத்தால் மட்டுமே வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

From around the web