உலகக்கோப்பை கிரிக்கெட் 2023: வங்கதேசத்திற்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

 
Aus vs Ban

வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதையடுத்து மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

Aus vs Ban

இந்த தொடரில் இன்று நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணிகள் மோதின. இதையடுத்து வங்கதேச அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் நிதானமாக ஆடி ஓரளவு ரன் சேர்த்தனர். முதல் விக்கெட்டிற்கு 76 ரன்கள் சேர்த்தனர். அதனை தொடர்ந்து டவுஹிட் ஹிர்டாய் அடித்த அரைசதம் மற்றும் அடுத்தடுத்து வந்த வீரர்களால் வங்கதேச அணி 300 ரன்களை கடந்தது.

இறுதியாக 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி  8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய தவுஹித் ஹிர்டாய் அதிகபட்சமாக 74 ரன்களும், கேப்டன் நஜ்முல் ஹூச்சைன் 45 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை ஆடம் சம்பா, சீன் அப்போட் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

Aus vs Ban

தொடர்ந்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இதில் டிராவிஸ் ஹெட் 10 ரன்களில் அவுட்டாகி வெளியாற, அடுத்த விக்கெட்டுக்கு மிட்சேல் மார்ஷ் களமிறங்கினார்.

அரை சதம் விளாசிய வார்னர் 53 ரன்களில் கேட்ச் ஆனார். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித்- மிட்சேல் மார்ஷ் ஜோடி அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இறுதியாக 44.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 307 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிட்சேல் மார்ஷ் (177) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (63) இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

From around the web