ஆசிய கோப்பை இறுதிப்போட்டி.. 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை நின்றதும் ஆட்டம் தொடங்கியது.
போட்டியின் முதல் ஓவரிலேயே பும்ரா, குசல் பெராரே விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் ஆட்டத்தின் 4-வது ஓவரை வீசிய முகமது சிராஜ், இலங்கை அணி வீரர்கள் நிசாங்கா, சமரவிக்ரம, அசலன்கா மற்றும் தனஞ்சயா டி சில்வா ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் தனது அடுத்த ஓவரில் இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதன் மூலம் முகமது சிராஜ் ஒருநாள் போட்டிகளில் குறைந்த பந்துகளில் (16 பந்துகள்) 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் சமிந்தா வாஸ் உடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார். தொடக்கம் முதலே தடுமாறிய இலங்கை அணி வெறும் 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
𝗔𝗦𝗜𝗔 𝗖𝗨𝗣 𝟮𝟬𝟮𝟯 𝗖𝗛𝗔𝗠𝗣𝗜𝗢𝗡𝗦! 🏆
— BCCI (@BCCI) September 17, 2023
Congratulations #TeamIndia 🇮🇳🥳#AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/8z6dgXBAaF
இதையடுத்து 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்த நிலையில் 6.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 51 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நடப்பு சாம்பியனான இலங்கை அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷான் 23 ரன்களும் சுப்மன் கில் 27 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் 8-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.